கொங்கணாபுரம் சந்தையில் 6 ஆயிரம் ஆடுகள் விற்பனை

இடைப்பாடி, ஜன.9: இடைப்பாடி அருகே கொங்கணாபுரம்சந்தையில் 6ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. இதில் மொத்தம் ₹5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு, 6 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர உள்ளதால், கடந்த வாரத்தை விட ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது.  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்ததால், அதிகாலையில் இருந்தே விற்பனை களை கட்டியது. 10 கிலோ எடையுள்ள ஆடு ₹5000 முதல் ₹6700 வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ₹10,000 முதல் ₹13,000 வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ₹2500 முதல் ₹3000 வரையும் விலை போனது. இவை தவிர 6ஆயிரம் பந்தய சேவல், கோழிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காகம், கீரி, செங்கருப்பு, மயிலேசுருளி ஆகிய ரகத்தைச் சேர்ந்த பந்தய சேவல்கள் ₹1000 முதல் ₹6000 வரையிலும் விலைபோனது. பந்தய சேவல்கள் ஒன்றை ஒன்று மோத விட்டு தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டது. கோழி ₹100 முதல் ₹1000 வரை விலை போனது. பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகளுக்கான அலங்கார கயிறு, சலங்கைகள் ₹10 முதல் ₹100 வரை விற்கப்பட்டது. இவை தவிர 110 டன் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது. 60 கிலோ கொண்ட சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ₹1000 முதல் ₹2800 வரையிலும், தக்காளி கிலோ ₹40 முதல் ₹45 வரையும் விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் நேற்று ₹5கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்தனர்.

Related Stories: