வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கைது திருவலம் அருகே பரபரப்பு பழுதடைந்த ஊராட்சி கட்டிடத்தை இடிக்கும் தகராறில்

திருவலம், ஜன.5: திருவலம் அருகே பழுதடைந்த ஊராட்சி கட்டிடத்தை இடிக்கும் தகராறில் அதிமுகவை சேர்ந்த வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரை போலீசார் கைது செய்தனர். தமிழக அரசு கடந்த மாதம் தமிழகத்திலுள்ள பழுதடைந்த பள்ளி மற்றும் அரசு கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த அப்பத்தா மோட்டூர் கிராமத்திலுள்ள பழுதடைந்த ஊராட்சி அலுவலகக் கட்டிடத்தினை கடந்த மாதம் ஜேசிபி மூலம் இடித்து அப்புறப்படுத்த காட்பாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நந்திவர்மன் மற்றும் ஒரு சிலர் முயற்சித்தனர். இதுகுறித்து தகவலறிந்த குப்பத்தா மோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் சோனியா திருமால், அவரது கணவர் திருமால் மற்றும் சிலர் அப்பகுதிக்கு சென்று கட்டிடத்தை இடிக்க மறுப்பு தெரிவித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் இருதரப்பினரையும் கடந்த மாதம் 26ம் தேதி மாலை திருவலம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்திருந்தார்.

அதன்படி காவல் நிலையத்திற்கு வந்த இரு தரப்பினரும் காவல் நிலையம் வெளியே வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து திருமால், மகேஷ், ரஜினி, கார்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவானவர்களை தேடி வந்த நிலையில், நேற்று அதிகாலை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரும், காட்பாடி ஒன்றிய ஜெ. பேரவை செயலாளருமான ஆனந்தன்(48) என்பவரை அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: