×

நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

நாமக்கல்: தமிழர் திருநாள் பண்டிகையான தைப்பொங்கல் வரும் 14ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தில் பொட்டி ரெட்டிப்பட்டி, பள்ளிபாளையம், அலங்காநத்தம் உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக  விவசாயிகள், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்கள். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் கிராமத்தில், கடந்த 22 ஆண்டாக தமிழ்ச்செல்வி(50) என்பவர் காளைகளை வளர்த்து, பயிற்சி கொடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இவரைத் தொடர்ந்து இவரது மகன் கோவிந்தன்(34) என்பவரும், காளைக்கு தீவிரமாக பயிற்சியளித்து வருகிறார். இவர் பழிவாங்கும் புலி, கில்லி, வில்லு, பழிவாங்கும்புலி -2, காட்டு சிங்கம் மற்றும் கருப்பு புலி போன்ற பெயர்களில் காலம் காலமாக காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது வளர்ந்து வரும் காட்டு சிங்கம் என்ற காளை, வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளதால், தீவிர பயிற்சி அளித்து வருகிறார். விவசாய நிலத்தில் மண்ணை கொம்புகளால் குத்தி எடுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.

தமிழ்ச்செல்வியின் காளைகள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் செக்கடி, கிரவயல், கோவை, திருப்பூர், பல்லவன் நாயக்கன்பட்டி, கொளத்தூர், அலங்காநத்தம், எருமப்பட்டி, நாரைக்கிணறு, தம்மம்ம்பட்டி, முள்ளுக்குறிச்சி ஆகிய ஊர்களில் நடக்கும் போட்டிகளில் ஆண்டுதோறும் பங்கேற்று வருகிறது. இவர் தற்போது வளர்த்துவரும் காட்டு சிங்கம் என்ற காளைக்கு 6 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Jallikkattu ,Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...