×

நீலகிரி மாவட்டத்தில் 22,497 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

ஊட்டி: ஊட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் துவக்க விழா ஊட்டியில் உள்ள மார்க்கெட் ரேஷன் கடை வளாகத்தில் நடந்தது. விழாவில், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வரவேற்றார். கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். ஊட்டி எம்எல்ஏ கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், வனத்துறை அமைச்சர் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய ஆறு தாலுகாவில் 22 ஆயிரத்து 497 குடும்ப அட்டைகளுடன் 404 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பு 21 பொருட்களுக்கான தொகை ரூ.538 மதிப்புள்ள பொருட்களை அரிசி பெறும்குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. 22 ஆயிரத்து 497 குடும்ப அட்டைகளுக்கு ரூ.11 கோடியே 86 லட்சத்து 27 ஆயிரத்து 386 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தெர்குப்பு வழங்கும் விழா நடைபெறும் ஊட்டி கூட்டுறவு பண்டகம் 13 முழு நேர நியாய விலைக்கடைகளையும், 3 பகுதி நேர நியாய விலைக்கடைகளையும் என மொத்தம் 16 நியாய விலைக் கடைகளை நடத்தி வருகிறது. 16 நியாய விலைக்கடைகளில் 10 ஆயிரத்து 801 குடும்ப அட்டைகள் உள்ளது.

மார்க்கெட் நியாய விலைக் கடைகளில் 414 குடும்ப அட்டைகளும், மார்கெட் நியாய விலைக் கடைகளில் 363 குடும்ப அட்டைகளும் ஆக மொத்தம் 797 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இக்குடும்ப அட்டைகளுக்கு ரூ.4 லட்சத்து 28 ஆயிரத்து 786 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக்கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். நியாய விலைக்கடைக்கு வரும்போது குடும்ப அட்டைதாரர்கள் முகக்கவசம் அணிந்து, ஒரு மீட்டர் தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் மற்றும் தமிழக அரசால் தெரிவித்துள்ள கொரோனா தொற்று, தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Pongal ,Nilgiris ,
× RELATED காரையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா