ஒமிக்ரான் பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பு ஜெர்மனியில் இருந்து காட்பாடி வந்தவருக்கு கொரோனா

வேலூர், ஜன.4: ஜெர்மனியில் இருந்து காட்பாடி வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்ய சளி மாதிரிகளை மரபணு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சமீபமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாநிலத்தில் 3வது அலை தொடங்கியுள்ளதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் 48 வயது ஆண். இவர் ஜெர்மனியில் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக கடந்த 24ம் தேதி காட்பாடிக்கு வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்திருந்தது. தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த 1ம் தேதி மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவு நேற்று வெளியானதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கிறதா? என கண்டறிவதற்காக, சளி மாதிரிகள் சேகரிப்பட்டு மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் சுகாதாரத்துறையினர் மூலம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் நிலையில், ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டால் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: