திருச்சி, ஜன.3: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு லட்சத்து 8 வடைமாலை சாற்றப்பட்டது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில், தலைமை தபால் நிலையம் ஆஞ்சநேயர் கோயில், ரங்கம் ஆஞ்சநேயர் கோயில் என திருச்சியில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நேற்று நடைபெற்றது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை மற்றும் 10,008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டது. முன்னதாக மூலவர், உற்சவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாடு முடிந்த பின் சிறப்பு அலங்காரத்தில் மூலவர், உற்சவர் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இதை முன்னிட்டு கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேபோல தலைமை தபால் நிலையம் ஆஞ்சநேயர் கோயிலில் 10,008 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். கோயிலில் கூட்டம் கூடுவதை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர்கள் கூறுகையில், ‘காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஒரு லட்சத்து எட்டு வடை மாலை, 10,008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டது. இந்த ஆஞ்சநேயர் கோயிலை தவிர எந்த கோயிலிலும் பாரிஜாதா பூ கிடையாது. சஞ்சீவி மலைதான் வைத்திருப்பார். இக்கோயிலில் ஆஞ்சநேயர் வலது கையில் அபயஹஸ்தமும், இடது கையில் பாரிஜாத பூவும் வைத்துள்ளார். இக்கோயில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்று தொட்டு விளங்குகிறது’ என்றனர்.
திருவெறும்பூர்: திருவெறும்பூரில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் அனுமானுக்கு 48 வகையான சிறப்பு அபிஷேகம் கர்ப்பகிரகத்தில் உள்ள அனுமானுக்கு மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் அனைத்து பழவகைகளை கொண்டு உற்சவருக்கு அலங்காரம் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
லால்குடி: லால்குடி அருகே கல்லக்குடி சந்தோஷ ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. வெண்ணெய் காப்புடன் கூடிய சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கல்லக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூர், கீழரசூர், கல்லகம், மேலரசூர் உள்பட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
