×

சின்னசேலம் அருகே பரபரப்பு அடிப்படை வசதிகளின்றி சுங்கச்சாவடி திறப்பதை கண்டித்து த.வா.கவினர் போராட்டம்

சின்னசேலம், டிச. 25: சின்னசேலம் அருகே கீழ்குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுங்கச்சாவடியை திறக்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்ததால் சுங்கச்சாவடி திறப்பது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் உள்ள கீழ்குப்பம் கிராம எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச்சாவடி கட்டப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் அது திறக்கப்படுவது தள்ளிப்போனது. இதனால் கட்டப்பட்ட சுங்கச்சாவடி அறைகள் சேதமடைந்தன. கடந்த சில மாதங்களாக அதை சீரமைத்து கடந்த 18ம்தேதி திறப்பதாக இருந்தது. அதற்கான ஆயத்த பணிகளை சுங்கச்சாவடியினர் செய்து வந்தனர்.

இருப்பினும் அந்த தேதியிலும் திறக்காமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று சுங்கச்சாவடியை திறந்து கட்டணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அங்கு சென்று கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் கீழ்குப்பம் போலீசாரிடம் ஒரு சுங்கச்சாவடி என்றால் ஆம்புலன்ஸ் வசதி, ரெகவரி வேன் வசதி, வாகனங்கள் பார்க்கிங் வசதி மற்றும் அந்த நெடுஞ்சாலை பகுதி பள்ளமும் படுகுழியும் இல்லாமல் சரிசெய்ய வேண்டும். கழிப்பிட வசதி இருக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த அடிப்படை வசதிகளை செய்து தரும்வரை சுங்கச்சாவடியை திறக்கக்கூடாது என்றனர். இதையடுத்து சுங்கச்சாவடியினர் கோரிக்கைகளை சரிசெய்வதாக கூறினர். இதையடுத்து சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : TNA governor ,Chinnasalem ,
× RELATED வித்தியாசமான தகவல்கள்