×

கே.பூசாரிப்பட்டி அரசு பள்ளியில் ஆய்வகம் திறப்பு

கிருஷ்ணகிரி, டிச.16: கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ₹20 லட்சம் மதிப்பில் அடல் டிங்கர் ஆய்வகம் அமைக்கப்பட்டது. நேற்று தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அடல் டிங்கர் ஆய்வகத்தை திறந்து வைத்து, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, மாணவர்களிடம் கண்காட்சியில் இடம் பெற்றவை குறித்து கேட்டறிந்தார். இதில், அறிவியல் ஆசிரியர் பவுலின் ராணி, மாணவர்கள் சதீஷ், ஜெயபிரகாஷ், விக்ரம், ஹரீஷ் ஆகியோர், ரோபோட்டிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மனிதரை பின்பற்றும் ரோபோவை உருவாக்கி அசத்தினர். மேலும் தடைகளை தானே தாண்டி வழிமாற்றிக் கொள்ளும் ரோபோ, மனிதன் கை அசைவை பார்த்து கையசைக்கும் ரோபோ, ஏதேனும் சிறு அசைவு ஏற்பட்டாலும் புகைப்படம் எடுக்கும் ரோபோ என பல்வேறு வகையான ரோபோக்களை உருவாக்கியிருந்தனர். தானியங்கி கார் பார்க்கிங், 3ஜி பிரிண்டர் மூலம் பொம்மைகள் செய்தல் உள்பட 60க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். ஓராண்டிற்குள் தேசிய அளவில் வெற்றி பெறுமளவு முழு ரோபோவை உருவாக்குவதே லட்சியம் என வழிகாட்டி ஆசிரியர் பவுலின் ராணி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, கூடுதல் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ், பிடிஏ தலைவர் குணசேகரன், பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா, ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : K. Pusaripatti Government School ,
× RELATED மது விற்ற 2 பேர் கைது