×

டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், டிச. 16: விருத்தாசலம் நகரத்திற்கு உட்பட்ட கடலூர் ரோட்டில், 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் அருகிலேயே காய்கறி சந்தை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கோட்டாட்சியர் அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் அதிக அளவில் மதுப்பிரியர்கள் அட்டகாசம் இருந்து வருவதுடன் வாகன நெரிசல் மற்றும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே பாமகவினர் இந்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் விருத்தாசலம் நகர செயலாளர் விஜயகுமார், நகர தலைவர் சீனு, மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வ மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : Tasmac ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு