×

பென்னாகரம், ஒகேனக்கல்லில் 80 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

தர்மபுரி, டிச.15: பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல்லில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, 80 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில், பென்னாகரம், ஒகேனக்கல்லில் செயல்படும் மீன்கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் பென்னாகரம் பகுதியில் உள்ள மீன்கடைளில் இருந்து அழுகிய 40 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதேபோல், ஒகேனக்கல்லில் 40 கிலோ அழுகிய மீன்கள் என மொத்தம் 80கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மீன் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் மூன்று கடைகளுக்கு மொத்தம் ₹10 ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், கந்தசாமி ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவி கடத்தல் : தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்த 16வயது சிறுமி, அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த 11ம் தேதி தொப்பூர் அருகே உமியம்பட்டியில் உள்ள தாத்தா வீட்டிற்கு ெசல்வதாக, பெற்றோரிடம் கூறி விட்டு சென்றவர், அங்கு செல்லவில்லை, வீடும் திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், உமியம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் தங்கள் மகளை கடத்தி சென்றிருக்கலாம். அவரிடம் இருந்து மகளை மீட்டு தருமாறு கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் மாயம் : தர்மபுரி மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி மகன் சதீஷ்குமார்(21). இவர், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆயில் மோட்டார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கினறனர். பெண்ணை தாக்கிய 2பேர் கைது : மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மனைவி சுமதி (35), இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காந்திநகர் பகுதியை சேர்ந்த வல்லரசு (21), சிவா(21) ஆகிய 2பேரும் சுமதி வீட்டை நோட்டமிட்டப்படி இருந்துள்ளனர். இதைப்பார்த்த சுமதி அந்த வாலிபர்களிடம் சென்று கேட்டபோது, உன்னை பார்க்கவில்லை, உனது மகளை பார்க்க நிற்கிறோம் என கூறியுள்ளனர். இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், வாலிபர்கள் 2பேரும் இணைந்து சுமதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமதி மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags : Pennagaram ,Okanagankal ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...