×

பரங்கிப்பேட்டை அருகே பரபரப்பு திருநங்கை அடித்து கொலை போலீசார் தீவிர விசாரணை

புவனகிரி, டிச. 15: திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மணலூர் பகுதியில் வசித்து வந்தவர் அர்ஜுனன் என்கிற பனிமலர் (31). திருநங்கையான இவர் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் நள்ளிரவு பனிமலர் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூரில் உள்ள தைல மர தோப்பில் சடலமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பனிமலர் முகத்தில் காயங்களுடன், காதில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த திருநங்கையுடன் மணலூர் கிராமத்தில் ஒன்றாக தங்கி இருந்த திருநங்கை ரூபா (34) மற்றும் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இரவிலேயே காவல் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து திருநங்கை ரூபா பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் கடலூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்திற்கு வந்தனர். அங்கு நீண்ட நேரம் ஆய்வு செய்து தடயங்கள் கிடைக்கிறதா என தேடினர். மேலும் அங்கிருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் ஸ்கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

‘பாதுகாப்பு தேவை’
கொலை சம்பவம் நடந்தது குறித்து திருநங்கைகள் கூறுகையில், திருநங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோன்ற சம்பவத்தில் ஒரு திருநங்கை கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகளின் பாதுகாப்பை தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும், என்றனர். கொலை செய்யப்பட்ட பனிமலர் அந்த இடத்திற்கு சென்றது ஏன், அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 2 குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பனிமலர் இறந்தது பற்றிய தகவலறிந்த சக திருநங்கைகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் நேற்று சிதம்பரம் அரசு மருத்துவமனை முன் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பனிமலர் இறந்தது குறித்து தர்மபுரியில் உள்ள அவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கை செல்போனில் பேசிய கடைசி உரையாடல்
இதற்கிடையே திருநங்கை கொலையானது குறித்து புகார் அளித்த ரூபா என்ற திருநங்கை கூறுகையில், சம்பவம் நடந்த உடனே திருநங்கை பனிமலர் எனக்கு செல்போனில் பேசினார். அப்போது தன்னை சிலர் தாக்கிவிட்டார்கள். அதனால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. பேச முடியவில்லை. உடனே வா எனக் கூறினார். நான் வருகிறேன் என கூறிவிட்டு சம்பவ இடத்திற்கு சென்றபோது திருநங்கை பனிமலர் இறந்துகிடந்தார், என்றார். 

Tags : Parangipettai ,
× RELATED பரங்கிப்பேட்டை அருகே பயங்கரம் இடப்பிரச்னையில் முதியவர் அடித்து கொலை