×

ராட்சத கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பிரச்னை: டிஆர்ஓ அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

ஈரோடு,  டிச. 15:  குண்டேரிபள்ளம் அணைப்பகுதியில் ராட்சத கிணற்றில் இருந்து குழாய்  மூலம் தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக இரு தரப்பு பிரச்னையை தீர்க்க  டிஆர்ஓ தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஈரோடு  மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் ராட்சத கிணறு தோண்டி ராட்சத  குழாய் மூலம் அதிக மின் திறன் கொண்ட மின் மோட்டரால் தினமும் வேறு  பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு அணையை  சுற்றியுள்ள வினோபா நகர், தோப்பூர், கோவிலூர், கவுண்டம்பாளையம்,  கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, ஏளூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து  பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும்  விதமாக இரு தரப்பினருடன் அமைதி பேச்சுவார்த்தை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்  டிஆர்ஓ முருகேசன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, எதிர்ப்பு  தரப்பு பொதுமக்கள் கூறுகையில், ‘‘நாங்கள் குறைந்த அடி ஆழத்துடன் போர்வெல், கிணறு அமைத்து வீட்டுக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரை பயன்படுத்துகிறோம்.  

ராட்சத கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தினமும் 3.50 லட்சம் லிட்டர்  தண்ணீர் உறிஞ்சினால், எங்களது ஆழ்துளை கிணறுகள் வற்றி, எங்கள் பகுதியில் குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும். எனவே, ராட்சத கிணற்றில் இருந்து குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து செல்லும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’ என்றனர். இதையடுத்து கிணற்றில் நீர் எடுக்கும் தரப்பினர் பேசுகையில், ‘‘நாங்கள் நீதிமன்ற அனுமதி பெற்று, விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.  

இதைத்தொடா்ந்து டிஆர்ஓ முருகேசன் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களிடம்  பேசுகையில், ‘‘நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளதால் நாங்கள் தலையிட முடியாது. உங்களுக்கு ஆட்சபனை இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு  காணுங்கள்’’ என கூறினார். இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மக்கள்  ஏமாற்றத்துடன் சென்றனா்.

Tags : DRO ,
× RELATED ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ