×

ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ

ஊட்டி : ஊட்டியில் நடந்த உலக மகளிர் தின விழாவில் கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோர் நடனமாடி அசத்தினர். நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று உலக மகளிர் தின விழா ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் அருணா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மகளிர் திட்ட அலுவலர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பழங்குடியின மக்கள் ஆகியோரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது தோடர், கோத்தர் பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியின்போது, கலெக்டர் அருணா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் கலந்துக் கொண்டு நடனமாடினர்.

இதனை கண்ட அங்கு கூடியிருந்த அனைத்து பெண்களும் நடனமாடி அசத்தினர். தொடர்ந்து, மகளிர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. மகளிர் தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டு ரசித்தனர். தொடர்ந்து கலெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு கிரீடம் வைத்து கவுரவிக்கப்பட்டது. மகளிர் திட்டத்தை சேர்ந்த பெண்கள், பெண்மையை போற்றும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி போட்டிருந்தனர்.

இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மகளிர் தின விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் பணியாற்றும் பெண்கள், மகளிர் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டிருந்த நிலையில், தாவரவியல் பூங்கா நேற்று பெண்கள் கூட்டத்தால் களைகட்டியது.

The post ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ appeared first on Dinakaran.

Tags : DRO ,Ooty Women's Day ,Ooty ,TRO ,International Women's Day ,Nilgiris District Administration ,Government Botanical Gardens ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...