×

காண்டை வழியாக திருமங்கலம் - வாகைக்குளம் இடையே டவுன் பஸ் தேவை 4 கிராமமக்கள் கோரிக்கை

திருமங்கலம், டிச.13: வாகைக்குளம், அழகுசிறை உள்ளிட்ட நான்கு கிராமங்கள், சாத்தங்குடி அரசு ஆரம்பசுகாதார நிலைய எல்லைக்குள் சேர்த்துள்ளதால் காண்டை வழியாக திருமங்கலம் - வாகைக்குளம் இடையே டவுன் பஸ்கள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை திருமங்கலம் ஒன்றியத்தின் எல்லையில் கடைக்கோடியில் அமைந்துள்ளது வாகைக்குளம். இதன் அருகேயுள்ள சின்ன வாகைக்குளம், அழகுசிறை மற்றும் புளியகவுண்டபட்டி கிராமங்கள் பல ஆண்டுகளாக அருகேயுள்ள செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இணைக்கப்பட்டிருந்தன.

கிராமமக்கள் அனைவரும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சென்று சிகிச்சை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் முதல் செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையிலிருந்து வாகைக்குளம், சின்ன வாகைக்குளம், அழகுசிறை கிராமங்கள், சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது பதிவுகளுடன் சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்லவேண்டியுள்ளது.

வாகைக்குளம் கிராமத்திலிருந்து சாத்தங்குடிக்கு நேரடி பஸ்கள் இல்லை. இதனால் கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைவரும் திருமங்கலம் வந்து இங்கிருந்து மற்றொரு டவுன்பஸ்சில் சாத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர். வாகைக்குளம் - திருமங்கலம் 17 கி.மீ, திருமங்கலம் - சாத்தங்குடி 7 கி.மீ என பல கி.மீ தூரம் இவர்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகைக்குளத்திலிருந்து காண்டை கிராமம் வழியாக திருமங்கலத்திற்கு நேரடி டவுன் பஸ்கள் இயக்கினால் சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எளிதில் போகமுடியும்.

காண்டை கிராமத்திற்கு அடுத்த திருமங்கலம் செல்லும் வழியில் சாத்தங்குடி அமைந்துள்ளதால், இந்த வழித்தடத்தில் டவுன் பஸ்களை காலை, மதியம் மற்றும் மாலை ஆகிய நேரங்களில் இயங்கினால் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நான்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thirumangalam - Vagaikulam ,Kandai ,
× RELATED திருமங்கலம் அருகே வைக்கோல் படப்பாக...