×

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம் மீது வனத்துறை சட்டம் பாய்கிறது

* கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் முன்னாள் அமைச்சர் சிக்குகிறார்* தடையில்லா சான்றுக்கு 15 லட்சம் வரை லஞ்சம் வாங்கியது அம்பலம்* 2ம் நாள் சோதனையில் மேலும் 3 கிலோ தங்கம் 4 கிலோ வெள்ளி லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல்சென்னை: மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் 2வது நாளாக நடந்த சோதனையில், மேலும் 3 கிலோ தங்க நாணயங்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 5.25 கிலோ சந்தன கட்டை மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி ஏ.வி.வெங்கடாசலம். மாநில வனத்துறையில் பணியாற்றி, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில், வெங்கடாசலம் 2019ம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக அரசால் நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, தற்போது வெங்கடாசலம் 2 ஆண்டுகளாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்து வருகிறார். அவர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தபோது, தூத்துக்குடியைச் சேர்ந்த  தனியார் நிறுவனத்துக்க சாதகமாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக எஸ்டேட் பகுதியில் கட்டுமானம் கட்டுவதற்கு முறைகேடாக அனுமதி அளித்துள்ளார். வெங்கடாசலம் அனுமதி அளித்துள்ள இடத்திற்கு கடந்த  ஆண்டு ஜூன் மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்திருந்தது. ஆனால் வெங்கடாசலம் தனக்கு சாதகமான அதிகாரிகள் துணையோடு லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று கொண்டு சட்டத்திற்கு புறம்பாக தடையில்லா சான்று வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் கோயம்புத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை பெரூர் தாலுக்காவில் விதிகளை மீறி செயல்படும் திட்டம் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்ததாகவும் அதற்காக பெரிய அளவில் அவர், லஞ்சம் பெற்றுக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவியாளர் மற்றும் தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு தகுதி இல்லாத நபர்களை பணம் பெற்றுக் கொண்டு பணியில் சேர்த்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்கும் பொழுது மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற சில கட்டுப்பாடுகள் உள்ளது. அந்த கட்டுப்பாடுகளில் ஒன்று புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலை வளாகத்தில் 25 சதவீதம் மரங்களை நட வேண்டும். அப்போது தான் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு அனுமதி சான்று வழக்கப்படும். அப்படி அனுமதி வழங்கப்படும் தொழிற்சாலைகள் வெங்கடாசலம் கூறும் நிறுவனத்தில் தான் மரக்கன்றுகள் வாங்க வேண்டும். அப்படி வாங்கப்படும் ஒரு மரக்கன்றின் விலை 1000 என விலையில் வாங்க சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.திருச்சியில் வெங்கடாசலம், கடந்த 2017ம் ஆண்டு வனத்துறையில் இணை நிர்வாக இயக்குனராக பணியில் இருந்த போது, ஜெனரேட்டர், பாய்லர் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் அதிக விலைக்கு வாங்கியதில் அரசுக்கு 47 லட்சம் இழப்பு ஏற்படுத்தி உள்ளதும் விசாரணயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபால், கடந்த 2 ஆண்டுகளில் வெங்கடாசலம் சில தொழிற்சாலைகளை நிர்ப்பந்தித்து சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெற வேண்டும் எனக்கூறி, தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்ற வாறு 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சமாக பணம் வசூல் செய்து அதன்பிறகு தடையில்லா சான்று அனுமதி அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.அனைத்து குற்றச்சாட்டுகளின் படி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து வெங்கடாசலத்திற்கு சொந்தமான வேளச்சேரியில் உள்ள வீடு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீடு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகம் என 5 இடங்களில் ேநற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் நேற்று முன்தினம் இரவு வரை கணக்கில் வராத 13.50 லட்சம் ரொக்க பணம், 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன மரத்தால் ஆன இரண்டு தேவி சிலைகள் மற்றும் கட்டை, பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் வங்கி புத்தகங்கள் என மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேநேரம், வேளச்ேசரியில் உள்ள வீட்டில் இரண்டாவது நாளாக நேற்று மாலை வரை சோதனை நீடித்தது. அங்கிருந்த ரகசிய அறையில் மேலும், 3 கிலோ தங்க நாணயங்கள், 5.25 கிலோ சந்தன கட்டை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை வெங்கடாசலத்திற்கு சொந்தமான வீடுகள், அலுவலகத்தில் இருந்து 11 கிலோ தங்கம், 15.25கிலோ சந்தன கட்டைகள், 4 கிலோ வெள்ளி, பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த மோசடிக்கு சம்பந்தப்பட்ட துறையின் முன்னாள் அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள், வங்கி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறிப்புகள் வெங்கடாசலம் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் போது வெங்கடாசலம் அதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. வனத்துறை சட்டத்தின் படி ஒருவர் தனது வீட்டில் 15 கிலோ வரை சந்தன கட்டைகள் வனத்துறை அனுமதியுடன் வைத்து கொள்ளலாம். ஆனால் 15 கிலோவுக்கு மேல் சந்தன கட்டைகள் வைத்திருந்தால் அது வனத்துறை சட்டத்தின் படி குற்றமாகும். எனவே, வெங்கடாசலம் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 15.25 கிலோ சந்தன கட்டையால் ஆன பொருட்கள்  மற்றும் சந்தன கட்டைகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதைதொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக 15.25 கிலோ சந்தன மரக்கட்டைகள் வைத்திருந்த வெங்கடாசலத்திடம் தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெங்கடாசலத்திடம் விசாரணை முடிந்த உடன் வனத்துறை அதிகாரிகள் வெங்கடாசலத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதை தொடர்ந்து வெங்கடாசலத்தின் மீது வனத்துறை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து தனியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஒரு அரசு அதிகாரி வீட்டில் தனது வருமானத்திற்கு அதிகாக 11 கிலோ தங்கம், 13.50 லட்சம் பணம், 4 கிலோ வெள்ளி, பல கோடி சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை சட்டத்தின் படி ஒருவர் தனது வீட்டில் 15 கிலோ வரை சந்தன கட்டைகள் வனத்துறை அனுமதியுடன் வைத்து கொள்ளலாம். அதற்கு மேல் சந்தன கட்டைகள் வைத்திருந்தால் அது வனத்துறை சட்டத்தின்படி குற்றமாகும். …

The post தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம் மீது வனத்துறை சட்டம் பாய்கிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pollution Control Board ,Venkatasalam ,TN Pollution Control Board ,Onkadasalam ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை