டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படும் நேர மாற்றத்தை திரும்ப பெற வேண்டும்

ஈரோடு,டிச.6:ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் முருகையா தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் பாண்டியன், துணை தலைவர் பொன் பாரதி, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், டாஸ்மாக் நிர்வாகம் தற்போது டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றியமைத்ததை திரும்ப பெற்று, ஏற்கனவே செயல்பட்ட நேரமான காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதையே அமல்படுத்த வேண்டும்.  பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

அனைத்து கடைகளுக்கும் நிர்வாகத்தால் புதிதாக வழங்கப்பட்ட லாக்கர்கள் வழங்க வேண்டும். கடையின் விற்பனை தொகையை சென்னையை போலவே டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக வங்கி மூலம் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் பொது இடமாறுதல் அமல்படுத்த வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகையை அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வழங்க வேண்டும்.டாஸ்மாக் கடைகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமரா போன்று கடைக்கு வெளியிலும் கேமரா பொருத்த வேண்டும். பணி நிரந்தரம் பணிப்பாதுகாப்பு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் இன்று(6ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More