தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து கிடையாது கொரோனா அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கு கவர்னர் தமிழிசை எச்சரிக்கை

புதுச்சேரி, ஏப். 19:  கொரோனா அதிகமாக உள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கு போடப்படும் என கவர்னர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை  முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி  வைத்தார். இதைத் தொடர்ந்து,  மார்க்கெட்டில் நடந்து சென்று மக்கள் நெரிசலை கவர்னர் ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர், கூறியதாவது: மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. கொரோனா  தொற்று அதிகமுள்ள இடங்களை தனிமைப்படுத்தவது என்று முடிவு செய்துள்ளோம்.  ஏனென்றால், அந்த பகுதியை தனிமைப்படுத்தவில்லை என்றால், அங்கிருந்து மக்கள்  வெளியே வரும்போது நோய் தொற்று வர வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்கு  தடுப்பூசி பற்றிய கவலை வேண்டாம். தடுப்பூசியால் எந்த  பக்கவிளைவும் கிடையாது. உயிருக்கு ஆபத்து கிடையாது. அதனால் அரசு ஏற்படுத்தி  உள்ள அனைத்து வசதிகளையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜிப்மர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, அரசு பல் மருத்துவ கல்லூரி, இஎஸ்ஐ மருத்துவமனையில் வேண்டிய அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளன.

அதேபோல், தனியார்  மருத்துவமனையிலும் போதுமான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற சிகிச்சை பிரிவில் கூட்டம் கூடக்கூடாது என்பதால் டெலி  மெடிசின் மூலம் ஆலோசனை வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்  காற்றில் கூட பரவ வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். எனவே, உணவகங்களில் சமூக  இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை  தீவிரப்படுத்தி உள்ளோம். இதனால் தொற்று கட்டுப்படும் என்று நினைக்கிறேன். கொரோனா தொற்று அதிகமுள்ள  இடங்களில் லோக்கல் லாக் டவுனை நடைமுறைப்படுத்தவும், இல்லையென்றால் மக்கள்  அதிகம் கூடும் இடங்களில் தொற்று பாதிப்பு அதிகமிருந்தால் அதனை  கட்டுப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படும். ஆரம்பத்தில் கொரோனாவை பற்றி தெரியாததால் பொது  முடக்கத்தை பிரதமர் அறிவித்தார். இதனால் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.  இப்போது மாஸ்க் போட்டால் நோயை தடுக்க முடியும். நம்மிடம் தடுப்பூசி,  மருந்து இருக்கிறது. இவையெல்லாம் இருக்கும்போது கதவடைப்பு என்ற அளவுக்கு  நாம் போகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இதையும் தாண்டி தொற்று பாதிப்பு  இருந்தால் கதவடைப்பு குறித்து சிந்திக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>