×

செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

செஞ்சி, ஏப். 16: செஞ்சி மார்க்கெட் கமிட்டி பகுதியில் நேற்று அதிகாலை பெய்த மழையால்  6 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் செஞ்சி சுற்றியுள்ள பகுதியில் குறுவை பருவ நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் மார்க்கெட் கமிட்டி, தனியார் நெல் மண்டி, நெல் கொள்முதல் நிலையம் ஆகிய இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அரசு விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மார்க்கெட் கமிட்டியில் விற்பனைக்கு வந்தது. இங்கு நெல் மூட்டைகளை அதிகாலை முதல் எடை போடும் பணி நடைபெற்றது. அப்போது பெய்த கோடை மழையால் அங்கு வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதில் ஒருசில மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்த தார்ப்பாயால் மூடி பாதுகாத்தனர் தார்ப்பாய் எடுத்து வராத விவசாயிகளின் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர். செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் போதிய இட வசதி  இல்லாததால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு,  இட வசதி செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Ginger Market Committee ,
× RELATED செஞ்சி மார்க்கெட் கமிட்டியை விவசாயிகள் திடீர் முற்றுகை