இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்க உத்தரவு

வேலூர், ஏப்.16:அரக்கோணம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இரு வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேரும் கடந்த 7ம் தேதி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சூர்யா (23) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதுவரை மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெருமாள்பேட்டையைச் சேர்ந்த சிவா(32), வேடல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (23) ஆகிய இருவர் நேற்று வேலூர் ஜேஎம்-5 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

>