×

கொரோனா கட்டுப்பாடுகளால் இருக்கன்குடி கோயிலில் களையிழந்த கடைசி வெள்ளி திருவிழா 2 நாள் விழா ஒரு நாள் விழாவானது

சாத்தூர், ஏப். 10:  சாத்தூர் அருகே, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகளால், பங்குனி மாத கடைசி வெள்ளி திருவிழா நேற்று களையிழந்தது. 2 நாள் விழா ஒரு நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடி, தை, சித்திரை மற்றும் பங்குனி மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.  இந்நிலையில் நேற்று பங்குனி மாத கடைசி வெள்ளி என்பதால் பொங்கல் விழா நடைபெற்றது. கொரோனா 2வது அலை அச்சம் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் அம்மன் தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த கடைசி வெள்ளி பொங்கல் விழாவில், இருக்கன்குடி மற்றும் நத்தத்துப்பட்டி, கலிங்க மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, நென்மேனி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் வருகை தந்து பொங்கல் வைத்து வழிபட்டு, அம்மன் தரிசனம் பெற்றனர். ஆண்டுதோறும் பங்குனி கடைசி வெள்ளி திருவிழா 2 நாள் விழாவாக கொண்டாடப்படும். முதல் நாள் பொங்கல் விழா மற்றும் மறுநாள் முளைப்பாரி திருவிழா என களைகட்டும். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒரே நாளில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், மற்ற மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்களும் குறைவாகவே இருந்ததால், பங்குனி கடைசி வெள்ளி திருவிழா களையிழந்து காணப்பட்டது. கோவிலுக்கு வந்த  பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : Irukkankudi temple ,
× RELATED ரூ.10 கோடி மதிப்பிலான தங்க முதலீட்டு...