×

சிலிப்பின்றி சென்றவர்கள் பூத்களில் விரட்டியடிப்பு மாவட்டத்தில் தொடர்ந்து சரியும் வாக்களிப்போரின் எண்ணிக்கை

விருதுநகர், ஏப்.9:  சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடப்பு சட்டமன்ற தேர்தலில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பலநூறு கோடிகளை வாரி இறைத்தது. விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி துவங்கி கையெழுத்து இயக்கம், ரங்கோலி கோலம் விழிப்புணர்வு, காஸ் சிலிண்டர் ஸ்டிக்கர் விழிப்புணர்வு, மாதிரி வாக்குச்சாவடி மையம், விழிப்புணர் கலைநிகழ்ச்சி, பஸ்களில் ஸ்டிக்கர், அரசு அலுவலர்கள், போலீசாருக்கு பேட்ஜ் அணிவித்தல், வாக்காளர் விழிப்புணர் உறுதிமொழி, அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் போலீசார் மூலம் இருசக்கர வாகன பேரணி, தினசரி விழிப்புணர்வு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அத்துடன் ஓட்டு போடுவதற்காக சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்பட்டது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களிப்போர் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதத்தின் படி எந்த தொகுதியிலும், ஒரு முறை கூட வாக்கு பதிவான சதவீதம் உயரவில்லை என்பதை காட்டுகிறது.

2011 தேர்தலை விட 2016 தேர்தலில் 5 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது. 2016 தேர்தலை விட 2021 தேர்தலில் 2.71 சதவீத வாக்குப்பதிவு குறைந்துள்ளது. வாக்களிக்கும் சதவீதம் குறைவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதா என்பதை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும். குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்களிக்கும் முறையில் நவீனத்திற்கு ஏற்ற மாற்றங்களை செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவல் ஏற்படாமல் இருக்க வாக்குச்சாவடிகளில் கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தும், தொற்று அச்சம் காரணமாக வாக்களிக்க வரவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக வழங்கப்படும் பூத் சிலிப் வீடுகளுக்கு சென்று சேரவில்லை. பூத் சிலிப்பின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்ற மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தால் பலர் ஓட்டு போடாமல் திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், இம்முறை ஏப்.1க்கு பிறகு பூத் சிலிப் காலதாமதமாக அச்சிட்டு வந்தது. அதனால் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு, வாக்காளர்களுக்கு போய்சேரவில்லை. கட்சிகள் சார்பில் பணம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், பண விநியோகம் செய்தவர்களுக்கு அவரவர் முகம் பார்த்து வழங்கி உள்ளனர். அதனால் பக்கத்து வீடுகளுக்கு கிடைத்த பணம், தங்களுக்கு கிடைக்கவில்லை என பலர் இம்முறை ஓட்டு போட போகவில்லை என்ற தகவலும் வருகிறது. நூறு சதவீத வாக்குப்பதிவு உறுதிப்படுத்த வேண்டிய நிலையில், ஒவ்வொரு தேர்தலும் ஓட்டு போடுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது, ஆளுங்கட்சியினர் மீதும், ஜனநாயகத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட்டு வருவதை காட்டுகிறது. ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லையென்றால் நோட்டாவிற்கு வாக்களித்து அதிப்தியை தெரிவித்திருக்கலாம். ஆனால், எதையும் செய்யாமல் வீடுகளில் முடங்கி கிடந்து, டிவி, செல்போன்களில் நேரத்தை செலவிட்டு, வாக்களிக்காமல் புறக்கணித்தது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல என்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் வாக்கு சதவீதம்:
தொகுதி          2011    2016        2021
ராஜபாளையம்      80.09%    75.56%        73.89%
திருவில்லிபுத்தூர்    81.10%      76.25%         73.14%
சாத்து£ர்         82.18%     77.95%         75.17%
சிவகாசி        80.85%     73.54%         70.16%
விருதுநகர்          78.93%      73.17%         71.27%
அருப்புக்கோட்டை     83.06%      78.51 %         75.60%
திருச்சுழி            83.91%     80.55%         77.46%
மொத்தம்            81.45%     76.45%         73.74%

Tags : chase ,
× RELATED மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்