செய்யாறு அதிமுக எம்எல்ஏவுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை மறந்ததாக குற்றச்சாட்டு ஆரணி புதிய மாவட்ட விவகாரம் படம் உண்டு

செய்யாறு, மார்ச் 26: ஆரணி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, செய்யாறு அதிமுக எம்எல்ஏவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நடந்த அதிமுக பிரசார கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசியபோது, செய்யாறு நகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இதையடுத்து, செய்யாறு தாலுகாவை சேர்ந்த மக்கள் தங்களது 31 ஆண்டு கால கோரிக்கையை முன் வைத்து, கடந்த 2019ம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை எம்எல்ஏ தூசி கே.மோகன் தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். மேலும், செய்யாறு மாவட்டம் உருவாக்க கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 21ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அதன்படி, ஆரணி தொகுதியில் முதல்வர் பிரசாரம் செய்தபோது, திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பால் செய்யாறு மக்கள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தற்போதைய செய்யாறு அதிமுக எம்எல்ஏ தூசி கே.மோகன் துணை போனதாகவும் கூறி, செய்யாறு நகரம் முழுவதும் நேற்று கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆளும்கட்சி எம்எல்ஏவுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>