×

தாமதமாக வந்ததால் அனுமதிக்க மறுப்பு உழவர் சந்தை அதிகாரிகளை கண்டித்து உடுமலையில் பெண் விவசாயிகள் மறியல்

உடுமலை, மார்ச் 24: தாமதமாக வந்த பெண் விவசாயியை வியாபாரம் செய்ய அனுமதிக்காத உழவர்சந்தை அதிகாரிகளை கண்டித்து, உடுமலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தை செயல்படுகிறது. இங்கு 65 கடைகள் உள்ளன. உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் இங்கு விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர், உழவர்சந்தையில் கீரைக்கட்டுகள் விற்பனை செய்கிறார். நேற்று காலை அவர் உழவர்சந்தைக்கு தாமதமாக வந்ததால், அவரை வியாபாரம் செய்ய அனுமதிக்காமல் அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் வேதனை அடைந்த அந்தப் பெண் உழவர்சந்தை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் செய்தார். அவருக்கு ஆதரவாக மற்ற பெண் விவசாயிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ‘எங்கள் ஊரில் இருந்து உடுமலைக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் கீரைக்கட்டுகளை தலையில் சுமந்துகொண்டு 4 மைல் தூரம் நடந்து அம்மாபட்டிக்கு வந்து பஸ் பிடித்து இங்கு வருகிறேன். இதனால் 8 மணிக்குத்தான் வர முடியும். ஆனால் அதிகாரிகள் 6 மணிக்கே வரவேண்டும் என கூறி என்னை வெளியே அனுப்பிவிட்டனர். பஸ் இல்லாமல் நான் எப்படி வர முடியும்? இந்த கீரைக்கட்டுகளை விற்றால்தான் நான் சாப்பிட முடியும். தரக்குறைவாக பேசுகின்றனர்’ என்றார்.மேலும் பெண் விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் மாஸ்க் போட்டு வியாபாரம் செய்கிறோம். ஆனால் பொதுமக்கள் மாஸ்க் போடாமல் வந்தால், எங்களை கண்டபடி ஒருமையில் திட்டி சஸ்பெண்ட் செய்கின்றனர். ஊழியர்கள் 4 பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் பார்த்து அனுப்ப வேண்டும். அவர்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டு, எங்களை தண்டிப்பது ஏன்? ரொம்பவும் இளக்காரமாக, கேவலமாக பேசுகிறார்கள். எனவே, உழவர்சந்தை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.உடுமலை எஸ்ஐ அனந்தகிருஷ்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Udumalai ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு