×

தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி, மார்ச் 21: தியாகதுருகம் அடுத்த சித்தலூர் கிராமத்தில் பிரசித்த பெற்ற பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 11ம் தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் அருகில் உள்ள மணிமுக்தா ஆற்றில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விழா தொடங்கி 10வது நாளான நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலையில் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலை உற்சவர் சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் பெரியநாயகி அம்மன் சாந்த நிலையில் தேரில் அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோயிலை சுற்றி வலம் வந்து, பின்னர் நிலையை அடைந்தது. இந்த தேர் திருவிழாவில் தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ராமதாஸ் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.  

Tags : Chittalur Periyanayaki Amman Temple Chariot Festival ,Thiyakathurugam ,
× RELATED தியாகதுருகம் புக்குளம் பஸ்...