×

திருவண்ணாமலையில் பாஜ வேட்பாளரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகள் அய்யாக்கண்ணு உட்பட 19 பேர் கைது

திருவண்ணாமலை, மார்ச் 19: திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட, நிர்வாணமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய முயன்ற தேசிய தென்னியந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரை தடுத்து நிறுத்தி 19 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பாஜக அரசை கண்டித்து, ேதசிய தென்னியந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பாஜக போட்டியிடும் திருவண்ணாமலை, அரவக்குறிச்சி, தளி, திருவையாறு, திட்டக்குடி ஆகிய 5 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது என அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார்.

அதன்படி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் இருந்து ஆர்டிஓ அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது, வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த விவசாயிகள் சக்கரபாணி, ராஜேந்திரன் ஆகியோர் திடீரென தங்களுடைய ஆடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு நிர்வாண கோலத்தில் நடந்து வந்தனர். அதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிர்வாண கோலத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்கள் மீது வேட்டியை போர்த்தி நிர்வாணத்தை மறைத்தனர். அப்போது, தங்களை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உட்பட 19 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், மாலை 5 மணியளவில் அனைவரையும் விடுவித்தனர்.

இதுகுறித்து, மாநில தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்ததாவது: விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்க வேண்டும், விளை பொருட்களுக்கு இருமடங்கு விளை தர வேண்டும். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ₹3 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நிர்வாண கோலத்தில் போட்டியிடுவதாக அறிவித்ேதாம். அப்போது, எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அமைச்சர் அமித்ஷா, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

எனவே, விவசாயிகள் அணிந்திருந்த கோவணத்தையும் மத்திய அரசு அபகரித்துவிட்டது என்பதை உணர்த்துவதற்காக பாஜக போட்டியிடும் தொகுதியில் நிர்வாணமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றோம்.
ஆனால், போலீசார் எங்களை திட்டமிட்டு தடுத்துவிட்டனர். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணையம் இதுபோன்ற எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எனவே, எங்களை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Thiruvannamalai ,Ayyakkannu ,BJP ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...