×

திமுக வெற்றியை தடுக்க சமூக வலைதளங்களில் அவதூறு விழுப்புரம் எஸ்பியிடம் திமுக மனு

விழுப்புரம், மார்ச் 20: திமுகவின் வெற்றியை தடுக்கும் வகையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய புகார் குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில், எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்கும் வகையில், சாதி குறித்து தவறான தகவலை வெளியிட்டு, கட்சியின் மீது கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளருமான பொன்முடிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.

பொன்முடி, தெரிவிக்காத ஒரு கருத்தினை தொலைக்காட்சியில் தெரிவித்ததை போல் பொய்யான தகவலை பரப்பி தேர்தல் சமயத்தில் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன், வெற்றியை தடுக்கும் விதமாக செய்தியை வெளியிட்டுள்ளனர். தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக பொய்யான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவதூறு பரப்பியவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையாக எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றாவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags : Defamation Vetapuram SPP ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை