×

நாகூர் அருகே இடிந்து விழும் நிலையில் சமத்துவபுரம் குடியிருப்புகள்

நாகை, மார்ச் 19: நாகூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள சமத்துவபுரம் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகூர் அருகே முட்டம் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் மேற்கூரைகளின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மேற்கூரைகள் கம்பிகள் வெளியே தெரிகிறது. வீடுகளில் உள்ள சுவர்களும் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் மிகப்பெரிய அபாயத்தில் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காக சமத்துவபுரம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு எல்லா அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சி காலம் முடிந்த பின்னர் சமத்துவபுரம் என ஒன்று இருப்பதுகூட தெரியாமல் தமிழகத்தை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் உள்ளனர். இதனால் வீடுகளின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பகல் நேரத்தில் இடிந்து விழுந்தால் உயிர் பிழைத்து கொள்ளலாம். ஆனால் இரவு நேரமாக இருந்தால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும்.

குழந்தைகள் விளையாடும்போது சுவர் பெயர்ந்து விழுந்தால் குழந்தைகளுக்கு காயம் ஏற்படும். திடீரென மேற்கூரை சுவர் கற்கள் பெயர்ந்து விழுவதால் சமையல் செய்வது கஷ்டமாக உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வீடுகளில் உள்ளே வந்து விடுகிறது. தற்போது கோடை வெயில் காலம் என்பதால் நாளுக்குநாள் மேற்கூரை அதிகளவில் வெடிப்புகள் ஏற்பட்டு கற்கள், கம்பிகள் கீழே விழ துவங்கியுள்ளது. எனவே இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் நலன்கருதி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Samathuwapura ,Nagore ,
× RELATED திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய...