×

கோவில்பட்டியில் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம் மக்கள் குறைகளை தீர்த்துவைப்பேன் அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

கோவில்பட்டி, மார்ச் 19: கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் குறைகளை தீர்த்துவைப்பேன் என கோவில்பட்டியில் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுபிரசுரங்களை வழங்கி வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி அளித்தார்.  கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ கோவில்பட்டி மேற்கு ஒன்றிய பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். சத்திரப்பட்டி, சத்திரப்பட்டி காலனி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி, இடைசெவல், இடைசெவல் காலனி, நாலாட்டின்புதூர், ரயில்வே காலனி, முடுக்குமீண்டான்பட்டி ஆகிய பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். வழிநெடுகிலும் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 தொடர்ந்து சாலைப்புதூர், ஆலம்பட்டி காலனி, தெற்கு கங்கன்குளம், படர்ந்தபுளி, தோணுகால், எம்.துரைச்சாமியாபுரம், நாச்சியாபுரம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் நடந்துசென்று அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கோவில்பட்டி தொகுதிக்கு நான் ஏற்கனவே பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளேன். வெற்றி பெற்றவுடன் இன்னும் அதிக அளவில் மக்கள் நலப்பணிகளை செய்வேன். மேலும் கோவில்பட்டியில் ஹாக்கி மைதானம், நகராட்சி அலுவலகம், 2வது பைப்லைன் குடிநீர் திட்டம், தாலுகா அலுவலகம், மோட்டார் வாகன அலுவலகம், அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், நவீன கருவிகள், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளேன். இவை தவிர சாலை வசதி, பேவர்பிளாக் அமைத்தல், பயணிகள் நிழற்குடை ஆகியனவும் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் குறைகளை தீர்த்துவைப்பேன்’’ என்றார்.

 பிரசாரத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, துணை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், ஒன்றியச் செயலாளர் அய்யாத்துரை பாண்டியன்,  அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்டச் செயலாளர் சவுந்தரராஜன்,  சீனிராஜ், பாபு, ஆபிரகாம்அய்யாத்துரை, வேலுமணி, அலங்காரபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags : Minister ,Kadambur Raju ,Kovilpatti ,
× RELATED பிரதமராக யார் வந்தாலும் அதிமுக ஆதரவு...