×

கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் இன்று வேட்பு மனுதாக்கல்

கோவை,மார்ச்18: கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி சண்முக சுந்தரம் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வடவள்ளி சண்முகசுந்தரம் கடந்த 4 நாட்களாக தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். நேற்று மாலை வடவள்ளி காமதேனு நகர் மருதம் விளையாட்டு அரங்கில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கோவை மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளருமாகிய பையா.ஆர்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன் வேட்பாளர் சண்முகசுந்தரத்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது, நமது வேட்பாளர் வடவள்ளி பேரூராட்சி தலைவராக 3 முறை பொறுப்பு வகித்துள்ளார். ஒருமுறை இவரது மனைவி பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்று மக்கள் சேவை ஆற்றியுள்ளார்.உள்ளாட்சி பிரதிநிதி பணியானது மிகவும் கடினமானது. மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்,சாலைவசதி,மின்விளக்கு,கழிப்பிடம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி கொடுத்துள்ளார்.

மக்களின் மனம் கவர்ந்ததால் மட்டுமே மீண்டும் மீண்டும் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். நல்ல ஒரு வேட்பாளரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு தந்துள்ளார். அவரை வெற்றி பெற கூட்டணி கட்சி தொண்டர்கள் பாடுபட வேண்டும். வீடு,வீடாக சென்று திமுக அறிக்கையை கொடுத்து உதய சூரியனுக்கு ஆதரவு திரட்டுங்கள். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் சண்முகசுந்தரத்தை வெற்றி பெற செய்வது என உறுதிபூண்டு வேலை பாருங்கள். நாளை(இன்று) நமது வேட்பாளர் சண்முக சுந்தரம் வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார். அது சமயம் வடவள்ளி விநாயகர் கோயில் முன்பிருந்து ஊர்வலம் நாளை காலை 10 மணிக்கு புறப்பட உள்ளது. மாவட்ட,பகுதி கழக,வட்டம், ஒன்றிய நிர்வாகிகள் தவறாமல் முகக்கவசம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு மு.கண்ணப்பன் பேசினார்.கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான கோவை எம்.பி.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ யு.கே.வெள்ளியங்கிரி,காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் எம்.என்.கந்தசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் மோகன்குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Coimbatore ,North DMK ,Shanmuga Sundaram ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...