காட்டுமன்னார்கோவில், ஜூலை 29: காட்டுமன்னார்கோவில் அருகே கந்து வட்டி கொடுமையால் விதவை பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குணவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன் மனைவி கீதாராணி (49). கணவரை இழந்த இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தனது உறவுக்கார பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த பழனியின் மனைவி சுபிதா (48) என்பவரிடம் ரூ.1.50 லட்சம் கந்து வட்டிக்கு வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.1.98 லட்சத்தை 3 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தியுள்ளார்.இந்நிலையில், நேற்று காலை கீதாராணி வீட்டுக்கு சென்ற சுபிதா, மேலும் வட்டியாக ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று வற்புறுத்தி, தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கீதாராணி, வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
