நாமக்கல், ஜூலை 29: நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்குவாரி உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள் மற்றும் ஜல்லிகற்கள் கொண்டு செல்ல 3 மாத காலத்திற்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தற்போது செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரி உரிமையாளர்கள், ஜல்லிகற்கள் உற்பத்தி உரிமையாளர்கள், உருண்டை கற்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய அனைவரும் இத்தடையை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும், இந்தத் தடையின் கீழ் எம்.சான்ட், பி.சான்ட், அரவைகற்கள், மாவு அரைக்கும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் கற்கள், கட்டட கற்கள், சாலை கட்டுமான கற்கள் உள்ளிட்ட கனிமப் பொருட்களை தமிழ்நாட்டின் எல்லையை கடந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
