×

குற்றச்சம்பவமே நடக்காத நிலையில் நடவடிக்கையா? காவல்துறை உயர் அதிகாரிகளின் செயல் உள்நோக்கம் கொண்டது: சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிருப்தி

 

சென்னை: குற்றச்சம்பவமே நடக்காத நிலையில் அதில் ஈடுபட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதில், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உள்நோக்கம் இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியை சேர்ந்த வாசுகி மற்றும் அப்பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் இடையேயான உரிமையியல் பிரச்னை குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வாசுகி புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், காஜா மொய்தீன், அவரது மனைவி, மகள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காஜா மொய்தீன் அளித்த எதிர் புகாரின் அடிப்படையில் வாசுகி, அவரது உறவினரான செங்கல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் ஜி.ராமஜெயத்தின் மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், சிறப்பு எஸ்.ஐ. ஜி.ராமஜெயம் குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்ய கோரி ராமஜெயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.சிவக்குமார் ஆஜராகி, மனுதாரர் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் அவர் பணியில் இருந்துள்ளார். புகார் அளித்த இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதன் அடிப்படையில், இரு தரப்பினரும் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இவற்றின் அடிப்படையில் மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி பி.டி.ஆஷா, தகராறு சம்பவமே நடைபெறவில்லை என்று புகார்தாரர்களே அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யாத காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. எனவே, சிறப்பு எஸ்.ஐ. ராமஜெயத்தின் பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி உடனடியாகப் பணியில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Special SI Suspend ,Chennai ,Chennai High Court ,Chengalpattu District ,
× RELATED கார்கில் போர் நினைவு தினத்தை ஒட்டி...