×

வேலூரில் சதம் அடித்தது வெயில் கோடையின் துவக்கத்திலேயே வறுத்தெடுக்கிறது

வேலூர், மார்ச் 16: கோடையின் தொடக்கத்திலேயே சதத்தை தொட்ட வெயில் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கோடையில் வெப்பம் தகிக்கும் மாவட்டங்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளடங்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முக்கிய இடம் பெறும். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு அக்னி நட்சத்திர காலத்தில் சராசரியாக 110 முதல் 115 டிகிரி வரை தகிக்கும்.அதேநேரத்தில் மகா சிவராத்திரி முடிந்து மறுநாள் தொடங்கும் கோடை காலத்தில், ஏப்ரல் முதல் வாரம் அல்லது 2வது வார தொடக்கத்தில் வெயிலின் அளவு 100 டிகிரியை தொடும். அதுவரை 93 டிகிரி முதல் 98 டிகிரி வரை மாறி, மாறி வெயில் வாட்டத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் கடுமை குறைந்தே காணப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

அதற்கு கடந்த ஆண்டு மார்ச் தொடங்கி டிசம்பர் மாதம் வரை கடுமையாக அமலில் இருந்த ஊரடங்கால் இயற்கையின் போக்கில் மாறுதல் தென்பட்டது. அதற்கேற்ப மழையும் போதிய அளவு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் பெய்தது. அதேபோல் குளிரும் கடுமையாக இருந்தது. இதனால் வெயிலின் கடுமை இந்த ஆண்டு குறைவாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி கோடையின் தொடக்கத்திலேயே வெயில் வறுத்தெடுத்தது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி 98.8 டிகிரியும், 3ம் தேதி 97 டிகிரியும் நேற்று முன்தினம் 96.3 டிகிரியும் வெயில் கொளுத்தியது.

தொடர்ந்து நேற்று 99.7 டிகிரி வெயில் சுட்டெரித்தது. 100 டிகிரியை தொட்டு சதம் அடித்த வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயில் காரணமாக வேலூர் நகரில் பிரதான சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இளநீர், குளிர்பானம், ஐஸ்கிரீம் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தள்ளுவண்டி கடைகளில் வெள்ளரிப்பிஞ்சு, பப்பாளி, அன்னாசி பழங்களின் விற்பனையும் களைக்கட்டியது.

Tags : Veil ,Vellore ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...