×

திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

திண்டுக்கல்/வத்தலகுண்டு, மார்ச் 16: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் நேற்று அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதை அடுத்து கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. திண்டுக்கல் தொகுதியில் முதல் நாளில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் மனு தாக்கல் செய்தார். அடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் மனுக்கள் பெறப்படவில்லை. நேற்று திண்டுக்கல் தொகுதிக்கு தேர்தல் அலுவலர் காசிச்செல்வியிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயசுந்தர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் அன்புரோஸ் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கலை முன்னிட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர் தேன்மொழி தேர்தல்  நடத்தும் அலுவலர் பிரபாகரன், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சுப்பையா  ஆகியோரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக ஒன்றியச்  செயலாளர்கள் யாகப்பன், மோகன், பாண்டியன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

இதேபோல் நிலக்கோட்டையில் போட்டியிட நாம் தமிழர் கட்சி மகளிர் அணி செயலாளர் கட்டக்காமன்பட்டியை சேர்ந்த வசந்தாதேவி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார். வசந்தா தேவி வேட்புமனு தாக்கல் செய்ய கைக்குழந்தையுடன் வந்தது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளராக நிலக்கோட்டை தொகுதி மகளிரணி துணைச் செயலாளர் கட்டக்காமன்பட்டி கிருஷ்ணவேணி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

நத்தம்: நத்தத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாநில கொள்கை பரப்பு செயலாளரான டாக்டர் சிவசங்கரன் நேற்று தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலையிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, இவர் வித்தியாசமான வகையில் ஏர் கலப்பையை தோளில் சுமந்து கொண்டு மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார். அப்போது தொண்டர்கள் கையில் கரும்புகளுடன் அவருடன் வந்தனர். இதைபோலவே சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரெட்டியபட்டியைச் சேர்ந்த ஜெயபால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Tags : AIADMK ,Dindigul, Nilakkottai constituency ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...