×

தாதகாப்பட்டி உழவர் சந்தை முன்பு சாலையோர கடைகளால் பொதுமக்கள் கடும் அவதி

 

சேலம், ஜூலை 15: சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை முன்பு வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சேலம் தாதகாப்பட்டி திருச்சி கிளை சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. சீலநாயக்கன்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதனிடையே, உழவர் சந்தைக்கு முன்பு ஏராளமான தற்காலிக காய்கறி மற்றும் பழக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் டூவீலரை நிறுத்த முடியாமல் அவதியடைகின்றனர். இதனால் உழவர் சந்தைக்கு போகும் வழியிலேயே ஒருசிலர் வண்டியை நிறுத்தி செல்வதால் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.மேலும், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இத்தகைய கடைகளால், அப்பகுதியில் காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதுகுறித்து புகார் அளித்தால், தற்காலிகமாக கடைகள் அகற்றப்பட்டு, மீண்டும் ஓரிரு நாட்களில் வைக்கப்படுகிறது. கடை அமைக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பலகை வைத்தும், அதனை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags : Dadakapatti Farmers' Market ,Salem ,Salem Dadakapatti Trichy Branch Road ,Seelanayakkanpatti ,Panamarathupatti ,Mallur ,Kondalambatti… ,
× RELATED மேட்டூரில் கஞ்சா விற்ற மின்வாரிய ஊழியர் கைது