சேலம், ஜூலை 13: சேலத்தில் நாய்கள் தொல்லையால் அவதி அடைந்த பொதுமக்கள், நடவடிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி 2வது வார்டு, ஜாகிர்அம்மாபாளையம் ராஜகாளியம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் 60க்கும் மேற்பட்ட நாய்களை பராமரித்து வளர்த்து வருகிறார். அந்த நாய்கள் அப்பகுதியில் செல்லும் குழந்தைகள், பெண்களை உள்ளிட்டோரை அடிக்கடி பயமுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வாகனங்களில் செல்ேவாரை கவ்விப்பிடிப்பது போல துரத்திச்செல்வதால் பலர் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அண்மையில் நாய்கள் சிலரை கடித்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ராஜகாளியம்மன் கோவில் 1வது, 2 வது தெருவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,நேற்று 5 ரோட்டில் இருந்து ஜங்சன் செல்லும் பிரதான சாலை முன் அமர்ந்து நாய் வளர்க்கும் நபரின் நடவடிக்கையை கண்டித்து, மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சூரமங்கலம் ேபாலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
