×

தென்மேற்கு பருவமழை தீவிரம் பல மாநிலங்களில் கனமழை கொட்டியது: டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் நேற்று கொட்டித் தீர்த்த பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்டிலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதித்தது. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. புனே அருகே பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் 3 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிலிருந்து ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

டெல்லியில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 72.6 மிமீ மழைபொழிவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி-நொய்டா விரைவுச்சாலையில் மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரமாக பெய்த இடைவிடாத மழையால் நிலச்சரிவுகள் மற்றும் ஆறுகளில் டேராடூனில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதே போல கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 5 மாவடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

* அதிக மழை பதிவு
தென்மேற்குப் பருவமழை ராஜஸ்தான், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் எஞ்சிய பகுதிகளுக்கும் முன்னேறி, நாடு முழுவதும் பரவியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. ஜூலை மாதத்தில் நாட்டில் இதுவரை வழக்கத்தை விட அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. இம்மாதத்தின் முதல் 9 நாட்களில் இயல்பான மழை அளவு 73.8 மி.மீ ஆக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் 101.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

* வயநாட்டில் மேலும் 3 உடல்கள் மீட்பு
வயநாட்டில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் புதைந்து போன 3 தொழிலாளர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 2 பேரை தேடும் பணி இன்றும் தொடரும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கள்ளாடி பகுதியில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Delhi ,Rajasthan ,Uttarakhand ,New Delhi ,
× RELATED ரயில் பெட்டியை அலங்கரித்த விவகாரம்...