×

ஜெய்ப்பூரில் பயங்கரம் அரசு வேலைக்காக அம்மாவை கார் ஏற்றி கொன்ற அன்பு மகள்: l ரூ.7 லட்சம் ஒப்பந்தத்துடன் சதி திட்டம் l 7 பேர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அம்மாவின் அரசு வேலையை பெற அவரை மகளே கார் ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ரவீந்திரா நகரை சேர்ந்தவர் நீரஜ் சர்மா(45). இவர் கடந்த 3ம் தேதி தன் மகள் ஆயுஷி சர்மாவை பயிற்சி மையத்தில் விட்டு விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதியதில் 100 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனே கார் ஓட்டுநர் தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து நீரஜ் சர்மாவின் சகோதரர் ராகேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “நீரஜ் சர்மாவின் கணவர் கடந்த ஓராண்டுக்கு முன் இறந்து விட, அவரது மறைவுக்கு பிறகு, கருணை அடிப்படையில் கணவரின் அரசு வேலை மனைவிக்கு கிடைத்தது.

ஆனால் தந்தையின் அரசு வேலை தனக்குதான் கிடைக்க வேண்டும் என நினைத்திருந்த ஆயுஷி சர்மாவுக்கு அம்மாவுக்கு அரசு வேலை சென்றது பிடிக்கவில்லை. அத்துடன் குடும்ப சொத்துகளை கைப்பற்றுவதில் அம்மா, மகள் இடையே நீண்டநாள் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ஆயுஷி சர்மா, தாயை கொலை செய்ய முடிவு செய்து, அதற்காக 3 மாதங்கள் திட்டம் தீட்டி உள்ளார்.

இதற்காக சில உறவினர்களுடன் சேர்ந்து, கூலிப்படை ஒன்றுடன் ரூ.7 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர் கூலிப்படையினரின் திட்டப்படி நீரஜ் சர்மா கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஆயுஷி சர்மா, அவரது சித்தப்பா மோகன் ஸ்வரூப், கூலிப்டையை சேர்ந்த ஆகாஷ் சர்மா, அரவிந்த் சர்மா, ஹேமந்த் சர்மா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்ராம் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்” என்றனர்.

Tags : Jaipur ,Rajasthan ,Ravindra Nagar ,Pratap Nagar ,Jaipur, Rajasthan… ,
× RELATED குஜராத்தில் பயிற்சியின்போது...