×

துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்ப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது: முன்னாள் துணைவேந்தர் அறிக்கை

சென்னை: துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரை சேர்ப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும், மாநில ஆட்சியாளர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரை சேர்ப்பதற்கு மாநில அரசு இசைவு தெரிவித்திருப்பது உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

நிர்வாக இசைவு அல்லது அரசாணை மூலம் சட்டத்தின் அடிப்படை அமைப்பை மாற்ற இயலாது. உரிய சட்டத்திருத்தம் செய்யாமல் தேடல் குழுவில் வெளிப்புற ஒழுங்குமுறை அமைப்பின் பிரதிநிதியை கட்டாயமாகச் சேர்ப்பது பல்கலைக்கழக தன்னாட்சியை குறைக்கும். இது சட்டமன்றத்தின் அதிகாரத்திற்கு அறைகூவல் விடும் செயலாக அமையும்.

இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கட்டமைப்பின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மாநில அரசுக்கும் மாநிலச் சட்டங்களுக்கும் உட்பட்டதாகும். இதில் மத்திய அமைப்பின் பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்துவது மாநில உரிமைகளுக்கு எதிரானதாகும். பல்கலைக்கழக மானியக் குழு என்பது உயர்கல்வி தரநிலைகளை வகுத்து, மானியங்கள் வழங்கி, ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை வெளியிடும் அமைப்பாகும்.

ஆனால் மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாக நியமனங்களில் நேரடி உறுப்பினராக இருப்பது அதன் முதன்மைப் பொறுப்பின் எல்லையை தேவையின்றி விரிவுபடுத்துவதாகும். ஒருபுறம் தரநிலைகளை மதிப்பீடு செய்யும் அமைப்பாகவும், மறுபுறம் துணைவேந்தர் தேர்வில் உறுப்பினராகவும் இருப்பது, அதிகார குவிப்பிற்கும் நலன் முரண்பாட்டிற்கும் வழிவகுக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி பல்கலைக்கழகச் சட்டங்களும் நிர்வாக மரபுகளும் உள்ளன.

அனைத்திற்கும் ஒரே மாதிரியான தேடல் குழு அமைப்பை விதிப்பது மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்காது. மத்திய அமைப்பின் பிரதிநிதியை நியமிப்பதில் ஏற்படும் தாமதம், துணைவேந்தர் நியமனத்தையும் தாமதப்படுத்தி, பல்கலைக்கழக நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மாநிலச் சட்டத்தில் குறிப்பிடப்படாத உறுப்பினரை தேடல் குழுவில் சேர்த்து மேற்கொள்ளப்படும் நியமனங்கள் நீதிமன்றங்களில் சவாலுக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. உயர்கல்வித் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானதே. ஆனால் அதற்காக மாநில அரசின் சட்டப்பூர்வ அதிகாரங்களும் பல்கலைக்கழக தன்னாட்சியும் பாதிக்கப்படக் கூடாது.

உயர்கல்வி தரநிலைகளும் மாநில உரிமைகளும் சமநிலையுடன் பாதுகாக்கப்படும் வகையிலான நடைமுறைகளே ஏற்றதாகும். இத்தகைய காரணங்களினால், மாநில பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில், பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை நியமிப்பதற்கு இசைவு தரும் போக்கினை தமிழ்நாட்டை ஆள்பவர்கள் உடனடியாக கைவிட்டு, மாநில உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : UGC ,Chennai ,Former ,Vice-Chancellor ,M.Rasendran ,University Grants Commission ,University… ,
× RELATED திருமா பேசியது என்னை தூக்கி வாரி...