புதுடெல்லி: நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் கனமழையால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அத்துடன் வங்க கடலில் ஒடிசாவை ஒட்டிய மேற்கு வங்கக் கடலோரத்தில் வலு பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாட்டின் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மும்பையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அந்நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் 30 செ.மீக்கும் அதிகமாக மழை கொட்டியதால் மும்பையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை செயல்பாடுகள் நேற்று ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் மும்பைக்கு வரும் விமானங்களின் நேரம், மும்பையில் இருந்து செல்லும் விமானங்களின் புறப்பாடு ஆகியவற்றில் காலதாமதம் ஏற்பட்டது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து, ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், மாநிலம் முழுவதும் பல பகுதிகள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இது புழுக்கமான வானிலையிலிருந்து மக்களுக்கு மிக தேவையான நிவாரணத்தை அளித்தது.
