×

வாகனம் கழுவ, செடிகளுக்கு நீர் ஊற்ற தடை; பெங்களூருவில் குடிநீரை வீணாக்கினால் ரூ.5000 அபராதம்

பெங்களூரு: எல்நினோ, போதிய மழையின்மை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், பெங்களூரு மாநகரின் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்திற்கு மத்தியில், குடிநீர் வீணாக்கப்படுவதைத் தடுக்க பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் (பிடபிள்யூஎஸ்எஸ்பி) சில தடை உத்தரவுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பிறப்பித்துள்ளது.

பெங்களூருவில் மழை இல்லாததால் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள பெங்களூரு குடிநீர் வாரியம், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிகமாக வந்து செல்பவர்கள் உட்பட பெங்களூருவின் சுமார் 1.4 கோடி மக்களுக்கும் சமமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறியுள்ளது.

வாகனங்களைக் கழுவுதல், தோட்டம் வளர்த்தல், கட்டுமானப் பணிகள், அலங்கார நீரூற்றுகள் மற்றும் அதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கள், சினிமா திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் அத்தியாவசியமற்ற தேவைகள், மற்றும் சாலைக் கட்டுமானம் மற்றும் சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குக் குடிநீரைப் பயன்படுத்துவதை பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இந்தச் சட்டத்தின் பிரிவு 109ன் கீழ் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால், ஆரம்ப அபராதத்துடன் சேர்த்து, நாளொன்றுக்கு ரூ.500 கூடுதல் அபராதமாக வசூலிக்கப்படும் என்று வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீச்சல் குளங்களை நிரப்புவதற்கும் பராமரிப்பதற்கும் குடிநீரைப் பயன்படுத்துவதையும் வாரியம் தடை செய்துள்ளது.

Tags : Bengaluru ,El Nino ,Bengaluru Water Supply and Sewerage Board ,BWSSB ,
× RELATED உபி பேரவை தேர்தல்; பாஜ தலைவர் ஆலோசனை