×

ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்புநிலை திரும்பியதால் அவசரகால காஸ் கட்டுப்பாடுகள் நீக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்புநிலை திரும்பியிருப்பதால், அவசரகால இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டது. இதன் காரணமாக, எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) விநியோகம் முடங்கிது. சர்வதேச எரிவாயு வழங்கும் நிறுவனங்கள் போர்ஸ் மஜூர் விதியை அமல்படுத்தி ஒப்பந்த விநியோகங்களை நிறுத்தியதுடன், கிடைத்த எரிவாயுவை முன்னுரிமை வாடிக்கையாளர்களுக்கு மாற்றி அனுப்பினர். இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.

உலகின் 3வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடான இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 50 சதவீதத்தையும் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 முதல் 45 சதவீதமும், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியில் சுமார் 65 சதவீதமும் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தே வருகிறது. குறிப்பாக கத்தாரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான எல்என்ஜி கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியாவை வந்தடைகின்றன. கச்சா எண்ணெய் இறக்குமதியை வேறு பல நாடுகளிடம் வாங்கி நிலைமையை சமாளித்த போதிலும், திரவ இயற்கை எரிவாயுவின் பெரும்பாலான பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதால் அது இந்தியாவை நேரடியாக பாதித்தது.

இதைத் தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், அவசரகால இயற்கை எரிவாயு விநியோக ஒழுங்குமுறை ஆணையை கடந்த மார்ச் 9ம் தேதி ஒன்றிய அரசு பிறப்பித்தது. அதில், வீடுகளுக்கான குழாய் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி), போக்குவரத்துக்கான சிஎன்ஜி எரிவாயு, சமையலுக்கான எல்பிஜி எரிவாயு உற்பத்தி ஆகியவைகளுக்கு முந்தைய 6 மாத சராசரி பயன்பாட்டின் 100 சதவீத இயற்கை எரிவாயுவை விநியோகிக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல், உரத் தொழிற்சாலைகளுக்கு அவர்களின் சராசரி தேவையின் 70 சதவீதமும், தொழில்துறை நிறுவனங்களுக்கு சராசரி தேவையின் 80 சதவீதமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முன்னுரிமை விநியோகத்தை உறுதி செய்வதற்காக பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிவாயு விநியோகம் குறைக்கப்பட்டது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இயன்றவரை தங்களது சராசரி எரிவாயு பயன்பாட்டை சுமார் 65 சதவீதமாகக் குறைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு, இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அங்கு, கச்சா எண்ணெய் விநியோகம் சீரடைந்துள்ளது. இந்நிலையில், இயற்கை எரிவாயு விநியோகத்தின் மீதான அவசரகால கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தற்போது முழுமையாக திரும்ப பெற்றுள்ளது. இது குறித்து ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை எரிவாயு விநியோக ஒழுங்குமுறை ஆணை, 2026-ல் செய்யப்பட்டிருந்த முக்கிய அவசர விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல் போக்குவரத்து மீண்டும் சீரடைந்து, எல்என்ஜி விநியோகம் வழக்கம்போல் நடைபெற தொடங்கியுள்ளதால், மார்ச் 9ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசரகால உத்தரவின் முக்கிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிவாயு மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

3 அவசரகால உத்தரவுகளும் வாபஸ்
ஹார்முஸ் ஜலசந்தியில் எரிவாயு விநியோகம் தடைப்பட்ட உடனேயே ஒன்றிய அரசு 3 முக்கிய அவசரகால கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாட்டை தவிர, பெட்ரோ கெமிக்கல் உற்பத்திக்குப் பயன்படுத்திய மூலப்பொருட்களை திருப்பி எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், மொத்த நுகர்வோருக்கான டீசல் விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்புநிலை திரும்பி விநியோக நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே மற்ற 2 அவசரகால உத்தரவுகளும் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Strait of Hormuz ,Union government ,New Delhi ,US ,Iran ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்புக்கு பின் ஒடிசாவில் 20 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்