புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணி ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஒடிசா, மணிப்பூர், சிக்கிமில் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஒடிசாவில் 20 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3.33 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆருக்கு பிறகான வரைவு பட்டியலில் 3.13 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர்.
8.32 லட்சம் பேர் இறந்து விட்டதாகவும், 10.07 லட்சம் பேர் இடமாறி விட்டதாகவும், 1.58 லட்சம் பேரின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போல, மணிப்பூரில் 20,93,076 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்குப் பிறகு 19 லட்சத்து 34 ஆயிரத்து 399 ஆக குறைந்துள்ளனர். 1,08,283 பேர் நீக்கப்பட்டுள்ளனர். சிக்கிமில் 4,71,018 வாக்காளர்கள் இருந்த நிலையில், 37,724 பேர் நீக்கப்பட்டு 4,33,294 பேர் வரைவு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மிசோரமில் நேற்று முன்தினம் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
