×

புதுவை பாஜக, அதிமுக கூட்டணியில் சிக்கல் 7 தொகுதிகளை கேட்டு அதிமுக பிடிவாதம் நெல்லித்தோப்பை விட்டுக்கொடுக்க மறுப்பு

புதுச்சேரி, மார்ச் 11: புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் குறைந்தது 7 தொகுதிகளை ஒதுக்க அதிமுக வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் பாஜக இதுவரை பிடி கொடுக்காமல் நழுவி வரும் நிலையில், நெல்லித்தோப்பை விட்டுக் கொடுக்க இருகட்சிகளும் மறுப்பதால் கூட்டணியில் அடுத்த சிக்கல் எழுந்துள்ளது. புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரசுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, அதிமுக 14 தொகுதிகளில் போட்டியிடும் என பாஜக மேலிடம் நேற்று அறிவித்தது. இருப்பினும் தங்களுக்கான தொகுதி பங்கீட்டை பாஜக இறுதி செய்யாததால் கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக கையெழுத்திடவில்லை. ஏற்கனவே 4 சிட்டிங் எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுக, குறைந்தபட்சம் தங்களுக்கு 7 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. கிழக்கு, மேற்கு என 2 மாவட்டமாக அதிமுக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 30 தொகுதிகளிலும் தங்களது கட்சியில் போட்டியிட நிர்வாகிகள் விருப்பமனு அளித்திருப்பதை சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளை தொடர்ந்து விடாப்பிடியாக கேட்டு வருகின்றனர்.

இதனிடையே என்ஆர் காங்கிரசுக்கு போக மீதமுள்ள 14 தொகுதிகளில் 10 இடங்களில் பாஜக களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும், மீதமுள்ள 4 தொகுதியை மட்டும் அதிமுகவுக்கு  ஒதுக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள்  வெளியாகி வருகின்றன. பாமக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிலையில் அந்த தொகுதியாவது அதிமுகவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக கல்தா கொடுக்க திட்டமிட்டுள்ளதால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
குறிப்பாக மேற்கு மாவட்ட செயலாளரான ஓம்சக்தி சேகர் போட்டியிட உள்ள நெல்லித்தோப்பு தொகுதியைகூட ஜான்குமாருக்காக பாஜக கேட்பதால் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். எக்காரணத்தை கொண்டும் இந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. மாநில தலைமைக்கே சீட் இல்லையா? என்ற ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறது.

இதுதொடர்பாக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஓம்சக்தி சேகரிடம் கேட்டபோது, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ளவற்றில் அதிமுக 7, பாஜக 6, பாமக 1 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. இதில் பாமக கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பதால் அந்த தொகுதியை பாஜக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிமுக குறைந்தது 7 தொகுதிகளில் போட்டியிடும். இதில் எங்களது தலைமை உறுதியாக உள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் என்றார்.

Tags : BJP ,AIADMK ,Nellithoppu ,
× RELATED யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல்...