புதுடெல்லி: யூசர்நேம் (பயனர்பெயர்) விவகாரத்தில் வாட்ஸ்அப்பை தொடர்ந்து டெலகிராம், சிக்னல் ஆகிய பிற சமூக ஊடகங்களுக்கும் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வாட்ஸ்அப்பில் பயனர்களின் மொபைல் எண்ணுக்கு பதிலாக பிரத்யேக யூசர்நேம் வழங்கும் அம்சம் விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இது இணைய வழி மோசடி, ஆள் மாறாட்டம், டிஜிட்டல் கைது மோசடிகளை அதிகரிக்கக் கூடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்த ஆலோசனைகள் அரசுக்கு திருப்தி அளிக்கும் வரை இந்த அம்சத்தை நிறுத்தி வைக்க வாட்ஸ்அப்புக்கு உத்தரவிட்ட ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், அரசு தனது ஆய்வை மற்ற பிற மெசேஜிங் தளங்களுக்கும் விரிவுபடுத்தி உள்ளது. அந்த வகையில், ஏற்கனவே யூசர்நேம் அம்சத்தை கொண்டிருக்கும் டெலிகிராம், சிக்னல் ஆகிய தளங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெலிகிராமுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில், யூசர்நேம் அம்சத்தை தொடர்ந்து பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும் என அரசு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
