×

குடியுரிமைக்கான முழுமையான சான்றாக பாஸ்போர்ட், ஆதார் இரண்டையும் அங்கீகரிக்க சட்ட திருத்தம் தேவை: காங். தலைவர் சசி தரூர் வலியுறுத்தல்

புதுடெல்லி: “பாஸ்போர்ட், ஆதார் இரண்டையும் குடியுரிமைக்கான முழுமையான சான்றாக மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து சசி தரூர் தன் எக்ஸ் பதிவில், “ஆதார் அட்டை என்பது தற்போது குடியுரிமையின் அடிப்படையில் இல்லாமல், 182 நாள்கள் உள்ளூரில் வசித்ததன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. மேலும், இது குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத குடியிருப்பாளர்கள் என இரு தரப்பினருக்கும் தரப்படுகிறது.

ஆதார் இந்திய குடியிருப்புக்கான மற்றும் அடையாள சான்றுதானே தவிர, அது இந்திய குடியுரிமைக்கான சான்று அல்ல. 2016ம் ஆண்டின் ஆதார் சட்டத்தின் பிரிவு 9-ன்படி, ஆதார் அட்டை குடியுரிமையையோ அல்லது வசிப்பிடத்தையோ தானாகவே உறுதிப்படுத்தாது. மேலும், இந்திய பாஸ்போர்ட் என்பது வௌிநாடு செல்வதற்கான ஒரு பயண ஆவணம் மட்டுமே. இது இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் பொதுநலன் கருதி பாஸ்போர்ட் வழங்கப்படலாம்.

1967ம் ஆண்டின் பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவு-20ன்கீழ், அரிதான மற்றும் பொது நலன் சார்ந்த சூழல்களில் குடியுரிமை பெறாதவர்களுக்கும் பாஸ்போர்ட்டுகளை வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, அர்த்தமற்ற இந்த சர்ச்சைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, பொதுஅறிவின் அடிப்படையில் அமைந்த ஒரு சட்ட சீர்திருத்தம் அவசரமாக தேவைப்படுகிறது.

அரசு அல்லது அதற்கான அதிகார அமைப்பால் வௌிப்படையாக ரத்து செய்யப்படவோ அல்லது திரும்ப பெறப்படவோ செய்யாத பட்சத்தில், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் இரண்டையும் இந்திய குடியுரிமைக்கான செல்லுபடியாகும் நிரந்தர சான்றுகளாக அங்கீகரிக்கும் விதமாக அரசு தனது சட்ட கட்டமைப்புகளை முறையாக திருத்தி, இத்தகைய ஆவணங்களை குடியுரிமைக்கான உறுதியான சான்றுகளாக அங்கீகரிக்க வேண்டும்.

இதற்கான தீர்வுகள் மிக எளிமையானது. இந்தியாவில் வசிக்கும் குடிமக்கள் அல்லாதவர்களுக்காகவே பிரத்யேகமாக பார்க்கும்போது வேறுபடுத்தி அறியக்கூடிய வகையிலான(உதாரணமாக, முன்பக்கத்தில் சாய்வாக தெரியும் சிவப்பு நிறப்பட்டை கொண்ட) ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்த வேண்டும்.

அனைத்து இந்திய குடிமக்களும் எப்போதும் சாதாரண குடிமக்களுக்கான ஆதார் அட்டை அல்லது செல்லுபடியாகும் பாஸ்போர்ட் ஆகிய இரண்டில் ஒன்றை வைத்திருப்பது கட்டாயம் என்றும், அதுவே குடியுரிமைக்கான போதுமான சான்று எனவும் அரசு பாதுகாப்பான முறையில் உத்தரவிட முடியும்” என தெரிவித்துள்ளார்.

Tags : President ,Sasi Tharoor ,New Delhi ,Congress ,
× RELATED தோழி இறந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை