×

கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலம் மூடி கிடந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ஊத்துக்கோட்டை: தினகரன் செய்தி எதிரொலியின் காரணமாக பெரியபாளையம் பஸ் நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலம் மூடிக்கிடந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.

சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் பெரியபாளையம் ஊராட்சியின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து இங்குள்ள பவானி அம்மன் கோயிலுக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரியபாளையம் பஸ் நிலையத்தைத்தான் பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு வருபவர்கள் வெயில் காலத்தில் குடிதண்ணீர் இன்றி கடும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 2018 – 2019ம் ஆண்டில் அப்போதைய கும்மிடிபூண்டி எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.விஜயகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6.50 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது.

ஆனால் இதை கட்டி முடித்து 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கவில்லை. இதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைப்பதாக தினகரன் நாளிதழில் கடந்த மாதம் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தினகரன் செய்தியின் காரணமாக பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இருந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. இதனால் டிரைவர், கண்டக்டர்கள் பெருமளவில் பயன்பெறுகிறார்கள். மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு டம்ளர் வைக்க வேண்டும். தண்ணீர் குடிப்பவர்களுக்கு இடையூறாக ஒருசிலர் தங்களது பைக்குகளை நிறுத்தி வைக்கிறார்கள். அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி என தெரிவித்தனர்.

Tags : Uthukkottai ,Dinakaran ,Periyapalayam ,Periyapalayam panchayat ,
× RELATED முதலமைச்சர் கலந்துகொள்ளும் மின்வாரிய...