தோஹா: கத்தார் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இந்தியாவைச் சேர்ந்த தங்கமகனான 28 வயதான நீரஜ் சோப்ரா காயத்தில் இருந்து மீண்டும் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின் நடப்பு சீசனில் முதல்முறையாக களம் இறங்கினார். முதல் முயற்சியில் பவுல் செய்த நீரஜ் சோப்ரா 2வது வாய்ப்பில் 82.77 மீட்டர் வீசினார். எனினும், 3வது முயற்சியில் 85.69 மீட்டர் தூரம் வீசி, 3வது இடத்திற்கு முன்னேறினார். 4வது சுற்றில் 83.45 மீட்டர் தூரம் வீசினார். 5வது வாய்ப்பில் 86 மீட்டருக்கு அதிகமாக வீசினால், டாப் 3ல் இடம் பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற கூடிய சூழல் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பை பவுல் செய்ததால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இலங்கை வீரர் ரூமேஷ் தரங்க பத்திரகே 88.68 மீட்டர் தூரம் எறிந்த முதலிடத்தை பிடித்தார். கிரெனடா ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.38 மீட்டருடன் இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் 85.99 மீட்டர் வீசி 3வது இடத்தையும் பிடித்தனர். இந்த போட்டியில், காமன்வெல்த் போட்டிகளில் விளையாட இந்திய தடகள கூட்டமைப்பு நிர்ணயித்திருந்த, 82.61 மீட்டர் என்ற தகுதிக்கான தொலைவை கடந்து சோப்ரா ஈட்டி வீசினார். இதனால், வரவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் விளையாட அவர் தகுதி பெற்றுள்ளார்.
