சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், இன்று ஆளுநர் வாசித்த உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்து உள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மாநில உரிமை, பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, சமூக நீதி, சமவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், திருநங்கையர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் நலன், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளடக்கிய ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, தவெக அரசால் தயாரிக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரை, தங்க முலாம் பூசப்பட்ட தகரமாகவே அமைந்திருக்கிறது என்றார்.
உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்குதல், உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைத்தல், கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு, நதிகள் இணைப்பு ஆகியவற்றிற்கு எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல், கடந்த கால ஆளுநர்களின் உரையில் இருக்கும் விவரங்களை அப்படியே ‘Cut, Copy, Paste’ செய்திருப்பது வழக்கமான சம்பிரதாய நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மாவட்டங்களைப் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி, தமிழகத்தின் டெல்டா பாலைவனமாக்கும் அரசாங்கத்தையும்; தென்மாவட்டங்களின் உயிர்நாடியான முல்லைப் பெரியாறு அணையை கர்நாடக இடித்துவிட்டு, புதிய அணையைக் கட்டியே தீருவோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்திருக்கும் கேரள அரசாங்கத்தையும் கண்டிக்கக்கூட முடியாமல் இருப்பதன் மூலம் மாநிலத்தின் உரிமை மற்றும் விவசாயிகளின் நலனைத் தாண்டி, ஆட்சி எனும் நாற்காலியின் நான்காவது காலைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி மீதான தவெகவின் விசுவாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
கொத்துக் கொத்தாக அரங்கேறும் கொலை, கொள்ளைச் சம்பவங்களும், நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுமே தவெகவின் கடந்த ஒரு மாத கால ஆட்சியின் அடையாளமாக மாறியிருக்கும் நிலையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுமே இந்த அரசின் லட்சியம்” என ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கேலிக்கூத்தானது என்று கடுமையாக சாடியுள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கும் மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம், தாலிக்குத் தங்கமும், தரமான பட்டுச் சேலையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டம், அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள், பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் எனக் கவர்ச்சிகள் நிறைந்த தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றுவதற்கான உத்திரவாதமோ செயல்திட்டமோ ஆளுநர் அறிக்கையில் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பது, மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. மொத்தத்தில் இன்றைய அரசு தயாரித்த ஆளுநர் உரை தங்க முலாம் பூசிய தகரமாகவே இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
