×

ஏற்காட்டில் மலர் கண்காட்சி முன்னேற்பாடு தீவிரம்

ஏற்காடு, மார்ச் 8: ஏற்காட்டில் மலர் கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். ஆண்டுதோறும் கோடை காலத்தின்போது ஏற்காட்டில் நடத்தப்படும் கோடை விழா பிரசித்தம். 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், சேலம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழக முழுவதிலுமிருந்தும், அண்டைய மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு கோடை விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் ஜி.பி.ஜி-2 ஆகிய பூங்காக்களில் தோட்டக்கலைத்துறை சார்பில், மலர் செடி விதைகள் நடவு செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.

மேலும் அண்ணா பூங்கா, சாலையோரம் தள்ளு வண்டிகளில் வியாபராம் செய்து வருபவர்களை அங்கிருந்து காலி செய்து, புதிதாக கட்டியுள்ள கடைகளை வழங்குமாறும், கடைகள் போதாத நிலையில், சந்தை வளாகத்தில் கடை நடத்த அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார். பின்னர், சேர்வராயன் கோயில் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்பகுதியில் உள்ள 478 ஏக்கர் பாக்ஸைட் மலைக்குன்று மால்கோ நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு, குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி, அந்த இடத்தை பார்வையிட்டார். மேலும், அந்த இடத்தை வனத்துறைக்கு ஒதுக்கி, மரக்கன்றுகள் நட்டு வனம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்வது குறித்து தாசில்தாரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பிடிஓ குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Yercaud ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து